உங்களுக்கு ஒரு நிமிடம் இருக்கிறதா?


எனக்குத் தெரிந்து, என்னோட இந்த பாடல் கேட்கும் பழக்கம் ஒன்பதாவது படிக்கும் காலத்தில் இருந்து ஆரம்பம் ஆகியது. அந்த நேரத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான வேலைகளில் ஒன்று புத்தகம் படிப்பது, இரண்டாவது பாடல் கேட்பது.
புத்தகம் என்றால் முழுமையான புத்தகம் மட்டும் அல்ல, பொருட்கள் மடித்து வரும் பழைய பேப்பர் துண்டு கூட படித்த பிறகு தான் குப்பைத் தொட்டியில் போடுவது வழக்கம்.
எனக்கு முதன்முறையாக கிடைத்த ஒரு பரிசு, "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" தளபதி பாடல்கள் அடங்கிய ஒரு T 60 series கேசட். இதன் மறுபக்கம் முழுவதும், கீரவாணி, நீலவேணி போன்ற நல்ல பாடல்கள் அடங்கியது. ஒரு நாள் முழுவதும் அந்த ஒற்றைக் கேசட்டை பக்கத்தை மாற்றி மாற்றி போட்டு கேட்டுக் கொண்டு இருந்த தினங்கள் அதிகம்.
அதன்பிறகு மாதம் மாதம் கொடுக்கும் பாக்கெட் மணியை சேர்த்து வைத்து நல்ல பாடல்கள் கேசட்டில் பதிந்து கேட்பது மட்டுமே முக்கிய பொழுதுபோக்கு.
எப்போதும் இரவில் தனியாக படிக்கும் போது, டேப் ரிக்கார்டில் மெல்லியதாக பாடல்கள் ஒலிக்க விட்டு படிப்பது எனது வழக்கம். என்ன பாடல், எந்தப் படம் என்று எல்லாம் நினைவில் இருக்காது. ஆனால் பாடல் ஒலிக்க வேண்டும். மனது ஒருமுகப்படுத்தி படிக்க எனக்கு மத்த எந்த சத்தங்களும் தொந்திரவு செய்யாதிருக்க பாடல் ஒலிப்பது அவசியம் எனக்கு.
சரி படிக்கும் போது தான் என்று இல்லை, உறங்கும் போதும் எனக்கு பாடல் ஒலிக்க வேண்டும். என்னுடைய மற்ற சிந்தனைகளில் இருந்து வெளியே வர, அமைதியாக உறங்க எனக்கு பாடல் கேட்பது பிடிக்கும். நாளை இந்த வேலைகள் உண்டு, என்ன செய்யலாம் என்ற யோசனையை உதறவோ, இன்று வார்டில் நடைபெற்ற ஒரு கசப்பான சம்பவத்தை நினைவில் இருந்து அகற்றுவதற்கோ எனக்கு பாடல் கேட்பது முழுவதும் கை கொடுத்தது. இரண்டு பாடல்கள் கேட்கும் போது, அதன் வரிகளுக்குள் இசையில் விழுந்து விடுவது மனதை அதன் வழக்கமான சிந்தனையில் இருந்து பிரித்து எடுத்து நாம் விரும்பும் ஒய்வை அளிக்க வல்லது .
எம் பி பி எஸ் முடித்த சமயங்களில் சிடிக்கள் அறிமுகம் ஆகியது. "நினைத்து நினைத்து பார்த்து, நெருங்கி விலகி நடந்து, உன்னால் தானே நானே வாழ்கிறேன்" வரிகள் எல்லாம் எத்தனை தடவை, திரும்பத் திரும்ப ஆட்டோ ப்ளே ஆப்சனில் இருந்து இருக்கும் என்று எனக்குத் தெரியாது. யுவன் ஷங்கர் ராஜா கம்போசிங்கில் மனதை அலைபாய விட்டு பைத்தியம் பிடித்து அலைந்த நாட்கள் அவை. கடைக்குச் சென்றால் யுவன் சிடியை தவிர வேறு எதையும் வாங்கத் தோணாது. சிடி ப்ளேயரில் இருந்து வீடு முழுவதும் அந்த இசை நிறைத்துக் கொண்டு இருக்கும்.
திரும்ப படிக்க வந்த காலங்களில் எப் எம் அறிமுகம். கேசட், சிடி எல்லாம் அவசியமற்றது போய்விட்டது. எந்நேரத்திலும் பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருக்கும் சூழ்நிலை. திருச்சியில் மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் போது ஹலோ எப் எம் மற்றும் சூரியன் எப் எம் எப்போதும் எங்களுடன் கூடவே இருந்தது.
அறைக்குள் நுழைந்து பல்பு உயிர்பிக்கும் போது ஆரம்பிக்கும் பாடல்கள், மறுநாள் அறையில் இருந்து வெளியேறும் போது தான் நிறுத்தப்படும். அறையில் பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருப்பது எனக்கு எந்த வகையிலும் இடைஞ்சலாகத் தெரியாது. மற்றபடி ஒரு குதூகல மனநிலையைத் தக்க வைத்துக் கொள்ள உதவும். தொடர்ந்து 36மணி நேரங்கள் பணி செய்து விட்டு வரும் போது, வந்ததும் நன்றாகத் தலை குளித்து விட்டு, விசிறிக்கு அடியில் தலை விரித்துப் போட்டு, "தாலாட்டும் பூங்காற்று நீ அல்லவா" என்ற பாடல் பிண்ணனியில் ஒலிக்க கையில் ஒரு பால குமாரன் எழுதிய புத்தகமோ, ரமணி சந்திரன் எழுதிய புத்தகம் படிக்கும் போதே, ஒரு மெல்லிய போதை மாதிரி தூக்கம் கண்களைத் தழுவும். தூங்கி எழுந்து பார்த்தால் மனது அடுத்த ஓட்டத்திற்கு தயாராக இருக்கும்.
இந்த இண்டர்நெட் யுகத்தில் கையில் எப்போதும் போன் வைத்து நோண்டிக் கொண்டு இருக்கும் போது இந்த பாடல் கேட்பது வேற ரூபத்தில் வந்து இருக்கிறது. ஒரு நாள் எதேச்சையாக ஒரு நண்பர் ஒருவர் இந்த காணொளியை பகிர்ந்து இருந்தார். Rajhesh Vaidhya வின் #Doyouhaveaminuteseries என்று வீணையில் ஒரு நிமிடம் பாடல் ஒன்றை வாசிக்கும் காணொளி.
இத்தனை பாடல்கள் கேட்கும் பழக்கம் இருந்தாலும், கிளாசிக் மியூசிக், கிளாசிக் இன்ஸ்ரூமெண்ட்ஸ் பத்தி எதுவும் தெரியாது என்பது தான் உண்மை. மேலும் இன்ஸ்ரூமெண்ட்ஸ் பத்தி தேடி வாசிக்கவும் தோன்றவில்லை. அதற்கும் நமக்கும் ஏதோ சம்பந்தம் இல்லை என்றே தோன்றும். டிசம்பர் மாத கச்சேரிகளில் சென்று ரசிக்கும் அளவிற்கு இசை பற்றிய தெரிவு இல்லாததால் அதை எல்லாம் கண்டு கொண்டதே இல்லை.
ஆனால் இந்த வீணையின் ஒலி என்னை ஆட்கொண்டுவிட்டது. நாம் கேட்டுப் பழகிய திரைப்பட பாடல்களை இந்த வீணையில் வாசிக்கும் போது மனம் அதன் பின்னர் சென்றஏ விடுகிறது. ஏனெனில் அந்த வீணையில் வரும் வரிகள் எல்லாம் ஏற்கனவே மனப்பாடமாத் தெரிந்த வரிகள், அந்த ஒலிக் குழைவு என்னை ஏதோ செய்ய ஆரம்பித்தது. அந்த வீணையின் நாதம் ஒலிக்க ஒலிக்க மனம் வரிகளைத் தன்னால் அசை போடும். அந்த நிமிடத்தில் எந்த வேலை செய்து கொண்டு இருந்தாலும், மனது அந்த வேலையை விட்டு விட்டு, ஒரு நிமிடம் அந்த பாடலை ரசிப்பதில் ஆழ்ந்து விடும். அப்படியே ஆழ்ந்து விட்டால் அந்த வீடியோ அடுத்து அடுத்து என்று ஆட்டோ ப்ளே மோடில் வேற வேற பாடல்களுக்கு கொண்டு போய் ஒரு பித்த நிலையை ஏற்படுத்துவதை உணர முடியும். நாம் எந்த மனநிலையில் இருந்தாலும் இது அதனுடைய அலைவரிசைக்கு இழுத்து விட்டு போய்விடும் என்பதை மட்டும் என்னால் அறுதியிட்டு கூற முடியும்.
இப்போது எல்லாம் பேஸ்புக்கில் இந்த வீடியோ வரும் போது கட்டுப் படுத்திக் கொண்டு அன்றைய பாடலில் மட்டும் நின்று கொள்கிறேன். இல்லையென்றால் நேரம் போவது தெரியாமல் அதில் மூழ்கி விடுகிறேன்.
இன்றைய பாடல்
"காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் கண்மணி உனை நான் கருத்தினில் நிறைப்பேன் உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சன்னிதி கண்ணே, கலைமானே.."
என்று வீணையின் நாதம் கேட்டுக் கொண்டு இருக்கும் போது, இந்த மாதக் கட்டுரை எழுத வேண்டும் என்ற குறுஞ்செய்தி உபால் சாரிடம் இருந்து வந்தது. அதைத் தொடர்ந்து தான் இவ்வளவு பெரிய மாத்திரை.
அதன் பின்னர் சும்மா இருக்கும் நேரங்களில் யூ டியூப் சென்று இவரைப் பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பிக்கும் போது நிறைய ஆச்சரியங்கள் எனக்கு காத்து இருந்தது.
96 படத்தில் வரும் காதலே காதலே பாடல் முதல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இவருடைய பங்களிப்பு அதிகம் இருந்தது தெரிய வந்தது. உலக அளவில் விருதுகளும், பாராட்டுகளும், இவருக்கு புதிதான விசயம் இல்லை என்று தெரிய வந்தது.
டார்வினின் பரிணாம வளர்ச்சி தியரியின் அடிப்படையில் ஒரு மரபு விசயங்களை மரபை மீறி, மற்ற விசயங்களில் கலந்து பொதுத்தளத்தில் எடுத்துக் கொண்டு வரும் போது தான் அது வேறு ஒரு பரிணாமம் அடைய முடியும். மற்ற வகைகளை விட இந்தக் கலப்பு இனங்கள் மற்றவை அடைய முடியாத உயரங்களை அடைய முடியும். வேறு ஒரு பரிணாமம் அடைவதே அதனுடைய வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருக்கும் என்ற எண்ணத்தை என்னால் முழுவதும் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.
கர்நாடக சங்கீதம், மக்களில் ஒரு பிரிவினருக்கு மட்டுமே என்று இருந்ததை உடைத்து அதை அனைவரும் ரசிக்கும் படி செய்ய முடியும், செய்யலாம் என்று செயலில் காட்டிக் கொண்டு இருக்கும் இவரை, எனக்கான இன்னொரு mentor ஆக மட்டுமே உள்வாங்க முடிந்தது.
இந்த மரபு மீறலை செய்கிறார் என்று இவரைப் பற்றிய புகார்கள் எழுந்த போது, இவருக்கு மேல் நிலையில் உள்ளவர்கள், இவருக்கு வருகிறது, செய்கிறார், செய்யட்டும் என்று காலத்தின் மாறுதலை அனுமதித்தது கூட வளர்ச்சியின் ஒரு வெளிப்பாடு என்று அறிந்து கொள்ளலாம்.
வெறுமே மீறுதல் மட்டும் போதுமா? அதில் வேறு புதிதாக என்ன செய்யலாம்? என்ற தேடலும் அவசியம் என்று உணர்த்திப் போனது இவரது பேட்டி. இவரின் வீணை இசையைக் கேட்ட பிறகு யூ டியூப்ல மற்றவர்களின் வீணை இசையைக் கேட்கும் போது அதில் வித்தியாசம் உணர முடிந்தது. என்ன வித்தியாசம்? என்று யோசித்த போதே அதன் பிறகு வந்த பேட்டி அதற்கான பதில் சொல்லியது.
வழக்கமான வீணைக் கம்பிகளுக்கு பதிலாக இரண்டு கம்பிகள் கிடாரில் பொறுத்தப்படும் தன்மையில் உள்ளது மாதிரி மாற்றம் செய்துள்ளேன். இதனால் வெஸ்டர்ன் பாடல்களை கொண்டு வருவது எளிதாக இருக்கிறது என்பது மாதிரி ஒரு பதில் வந்தது. காலத்திற்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக் கொள்ளாதது நலிந்து போகும் அபாயத்தில் உள்ளது. STAY UPDATE AND UP TO DATE என்ற இவரது கருத்துக்களை நாம் எல்லாவற்றுக்கும் பொறுத்திக் கொள்ளலாம் என்பதை கருத்தில் கொண்டு, "பழையன கழிதலும், புதியவை புகுதலும், வழுவ காலவகையினால் ஆனது" என்ற பழமொழியுடன் இந்த கட்டுரையை முடிக்கத் தோன்றியது. முடியும் தருவாயில் அவரது இந்தப் பாடல் பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்தது
லிங்க்:https://youtu.be/4RZPaRCpoDY
"காற்றின் அலைவரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா... நெஞ்சு நனைகின்றதா... இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதை செந்தேனை ஊற்றி கண்ணே உன் வாசல் சேர்த்தேன் ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா.. --- இதுவரை பொறுமையா வாசித்த அனைவருக்கும் மனங்கனிந்த நன்றிகள்
- அன்புடன்,
DR.M.இராதா.